தமிழர்களின் கல்வெட்டுகள்

              

             பண்டைக்காலத்தில் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட செய்திகள் கற்களில் வெட்டப்பட்டன. இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்திகளையே கல்வெட்டு என்று கூறுகிறோம். பெரும்பாலும் மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் போன்றவை கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டன. இவை தவிர வீரர்கள், பிரபுக்கள், அதிகாரிகள் போன்றோர்களின் முக்கிய நிகழ்வுகள் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டன.
               கல்வெட்டுகள் பெரும்பாலும் பொதுமக்கள் பார்ப்பதற்காக வெட்டப்படுவதால் இவை பொது இடங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. கோயில்கள், குகைகள், பொது மண்டபங்கள், வெற்றித் தூண்கள், நடுகற்கள் எனப்படும் இறந்தோர் நினைவுக்கற்கள் ஆகியவற்றில் கல்வெட்டுகளைக் காணலாம்.

தமிழ் கல்வெட்டுகள்: 


               கல்வெட்டுகள் பல நூற்றாண்டுகளாக நிலைத்து நின்று அவற்றில் குறிக்கப்பெற்ற செய்திகளையும், அவை எழுதப்பட்ட மொழி, எழுதியவர்கள், எழுதுவித்தவர்கள், அவர்களின் சமூகம் முதலிய செய்திகளைச் சொல்கின்றன. இவை அவர்களின் மொழி, சமூகம், வரலாற்றுத் தகவல்கள் போன்றவற்றை பற்றி அறிவதற்கு முக்கியமான ஆவணங்களாகத் திகழ்கின்றன. உலகிலேயே இலத்தீனுக்கு அடுத்து இந்தியாவில் கிடைக்கப்பெற்ற 1 இலட்சம் கல்வெட்டுகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் மொழியில் உள்ளது. தமிழ்நாட்டின் மிகப் பழைய கல்வெட்டுகள் நடுகற்களில் வெட்டப்பட்டவை ஆகும். தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்திகளும் இதற்குச் சான்றாகும்.

மாங்குளம் கல்வெட்டு:


               தமிழ்நாட்டில் மாங்குளம் பகுதியில் தமிழ் பிராமியக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கருதப்படுகிறது. இக்கல்வெட்டுகளே இதுவரை அறியப்பட்டவைகளுள் மிகவும் பழமையானது ஆகும். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கல்வெட்டு, சங்ககால மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
               தமிழ் பிராமிய கல்வெட்டுகளை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தால், இவ்வெழுத்துமுறை கி.மு.3 ஆம் அல்லது 4 ஆம் நூற்றாண்டியிலிருந்து கி.பி.4 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் கரூர் வேலாயுதம்பாளையம் கோயில் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. கி.பி.4 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வெழுத்து முறை மாற்றமடைந்து வட்டெழுத்தாகவும், பிறகு நாம் இப்போது பயன்படுத்தும் நவீன தமிழ் எழுத்துகளுக்கு முன்னோடியான எழுத்து முறையாகவும் வளர்ச்சியடைந்தது.

தொல்லியல் ஆய்வகம்:
               இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு படி எடுத்தல் முறையின் மூலம் காகிதத்தில் நகல் எடுக்கப்படுகிறது. இதை ஆய்வுக்கு பயனுள்ள வகையில் அவ்வப்போது பதிப்பித்து தொகுதிகளாக வெளியிடுகிறது ASI. இந்திய வரலாற்றிக்கு முக்கிய ஆதாரங்களாக விளங்கும் இந்த பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும், நம் நாடு முழுவதிலும் உள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், 1860 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கண்ணிங்ஹாம் எனும் ஆங்கிலேயரால் ASI உருவாக்கப்பட்டது.
               பல்வேறு அமைப்புகள் கல்வெட்டுகளைப் பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்டாலும், பல இடங்களில் கல்வெட்டுகளில் சுண்ணாம்பு பூசும்போதும், கட்டுமானப் பணிகளின் போதும் மண்ணுக்குள் புதைந்து வரும் நிலையில் உள்ளது. எனவே, நமது பெருமைகளை அறிய உதவும் கல்வெட்டுகளை பாதுகாத்து நமக்கு பின்னால் வரும் சந்ததியர்கள், நமது முன்னோர்களின் பெருமைகளை அறிந்து கொள்ள வழிவகுப்போம்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திருக்குறள் பற்றிய சில தகவல்கள்

புகழ் பெற்ற நூல் பெயர்கள் மற்றும் அதன் ஆசிரியர் பெயர்கள்